உலக நாடுகளின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது

0
114

சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்று பேசினார். இரு நாட்டுத் தலைவர்களும் வெண்ணெய் உருண்டை கல் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கண்டு ரசித்தனர். இதையடுத்து சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இருவரும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபரை சென்னைக்கு பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். இன்று காலை, கோவளத்தில் உள்ள ஃபிஸர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் சீன அதிபரும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்திய தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கலந்து கொண்டனர். பின்னர் சீன அதிபர் ஜின்பிங் உருவம் பதித்த பட்டு சால்வையை பிரதமர் மோடி அவருக்கு பரிசளித்தார். பின்னர், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் கிளம்பினார்.

அவரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார், பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் அங்கிருந்து நேபாளத்துக்குச் சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்,சபாநாகர் தனபால் மற்றும அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை தமிழகத்தில் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மற்றும் சீன அதிபருக்கு வரவேற்பு அளித்த மாணவர்கள் மற்றும் மக்களுக்கும் நன்றி. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அமைச்சர்கள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு நன்றி. பிரதமர்-சீன அதிபர் சந்திப்பின் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும், தமிழகத்தின் மதிப்பையும் உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here