அதிமுகவை விளாசிய அன்புமணி ராமதாஸ்

0
35

பாமகவுடன் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக இன்று ஆட்சியிலேயே இல்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தையொட்டி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுதோறும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கி பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் குடிமக்கள் பதிவு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்காக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள போது, அந்த மசோதாவுக்கு அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான பாமகவும் ஆதரவளித்தது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்தோம் என்றார். இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முரண்பாடான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், கொள்கைகையை விட்டுக் கொடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். எனினும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார். உள்ளாட்சித் தேர்தலில் கால் சீட்டு, அரை சீட்டு என கொடுத்து கெஞ்ச வைக்கிறார்கள் என குறிப்பிட்ட அன்புமணி, பாமகவுடன் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக இன்று ஆட்சியிலேயே இருந்திருக்காது என கடுமையாக சாடினார். அன்புமணியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும், கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here